Friday, September 17, 2010

DA NOW 45 %

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி (டி.ஏ.) உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை மாதம் முதல் கணக்கிட்டு தரப்படும். இதன்மூலம் 88 லட்சம் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, மத்திய அரசு ஊழியர்களுக்கு டி.ஏ. உயர்த்தப்படுகிறது. ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலையில் டி.ஏ. உயர்த்தப்படும். இந்த ஆண்டு ஜூலையில் உயர்த்தப்பட வேண்டிய டி.ஏ. இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்களுக்கு டி.ஏ. வழங்க வேண்டும்’ என்று 6வது ஊதியக் குழு ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் இப்போது 10 சதவீத டி.ஏ. உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் டி.ஏ. உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசில் பணிபுரியும் 50 லட்சம் ஊழியர்கள், 38 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள். டி.ஏ. உயர்வு மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு Rs 9,303.2 கோடி கூடுதலாக செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இப்போது மத்திய அரசு ஊழியர்கள் DA 35 சதவீதமாக உள்ளது. 10 சதவீத உயர்வுக்கு பின் 45 சதவீதமாகிறது. இந்த 10 சதவீத உயர்வு கடந்த ஜூலை மாதத்தில் இருந்து வழங்கப்படும். ஜூலை, ஆகஸ்ட் மாத நிலுவை தொகையுடன் செப்டம்பர் மாத சம்பளத்தில் 10 சதவீத டி.ஏ. சேர்த்து வழங்கப்படும் என்று மத்திய உயரதிகாரி ஒருவர் நேற்று மாலை தெரிவித்தார். தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ் என தொடர்ந்து பண்டிகைகள் வரவுள்ள நிலையில், 10% டி.ஏ. உயர்த்தப்பட்டுள்ளதால், மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பத்து சதவீத டி.ஏ. உயர்வு மூலம், மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தப்பட்சம் Rs 584/- முதல் அதிகப்பட்சம் Rs 8,000 /-வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.

எனினும், மத்திய அரசு ஊழியர்கள் சம்மேளன செகரட்டி ஜெனரல் கே.கே.என்.குட்டி கூறுகையில், ‘‘சில்லரை பணவீக்கம் 174 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், 45 சதவீதமாக டி.ஏ.வை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இந்த உயர்வு எங்களுக்கு அதிருப்தி அளிக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

நன்றி:தினகரன்
Posted by All India Postal Employees Union – Group ‘C’ Tamilnadu Circle at 8:11 PM

No comments :

Post a Comment